22 மார்ச் 2009

கடவுளை நான் கண்டேன்!


கடவுளை கண்டேன்.
கையைப் பிடிதேன்
விடு விடு என்றான்
விசையாய் நடந்தான்

நானிட்ட அவியை
உண்ணும் உனக்கே
இத்தனை கிறுக்கா
என நான் நினைத்தேன்
வாய் பேசவில்லை

நாலடி நடந்தவன்
நடையைக்குறைத்தான்
திரும்பிப் பார்த்தவன்
திகைத்து நின்றான்

பாவியென் எண்ணம்
பரமன் அறிந்தனன்?
கறுவிய எனதுளம்
குறு குறு என்றது.

பாய்ந்து சென்றவன்
பாதம் பிடித்தேன்
பாவியென் பாவ‌ம்
தொலைத்திடு என்றேன்

யார் நீ என்றான்
தூர‌ நின்றான்
முகத்தைச்சுழித்தான்
முக்கண் திறந்தான்

என் தொழில் செய்தாய்
என்னையே இகழ்ந்தாய்
ஏனிங்கு வந்தாய்
என்னை நினைத்தாய்?

நானுன் பிள்ளை
நீயென் தந்தை
மறந்தோ போனீர்?
மகன் நான் என்றேன்

மறந்தவன் நானோ?
என்னை மறந்தாய்
என் தொழிலை மறந்தாய்
உன்னை மறந்தாய்
உன் செயலும் மறந்தாய்

என் பிள்ளை நீயென்றால்
எனையணுக ஏன் தயக்கம்?
உன் தந்தை எனை நெருங்க‌
கலர் வேட்டி,பூணூல்-கழுத்தில்
உருத்திராக்கமுடன்
ஏஜெண்டுத்துரை பலபேர்
இன்னும் பல தரகர்
என் பெய‌ரால் இவ‌ர் வாழ்வ‌ர்
என் பிள்ளை உன் உழைப்பில்

ப‌டைத்தாலும் ப‌டைத்தேன் நான்
ப‌ல‌ கோடி மானிட‌ரை
பொறுக்குதில்லை என் இத‌ய‌ம்
அத்த‌னையுமிங்கே கோயில் மாடாக‌..

நிதமும் நீ குடியிருக்க‌
குவலயத்தில் உந்தனுக்கு
கோயில் பல கட்டி
வாயில் அத்தனையும்
வாழைமரம் நட்டு
கும்பாபிடேகம்,குடமுழுக்கு அத்தனையும்
செய்யும் எமையெல்லாம்
கோயில் மாடென்றீர்
நன்று நன்று!

உன்னைப் படைத்தேன்
உயிர் பல படைத்தேன்
அறிவையும் கொடுத்தேன்
அனைத்தையும் கொடுத்தேன்

அறிவைக்கொண்டே
ஆயுதம் படைத்தாய்
அதனைக்கொண்டே
அனைத்தையும் அழித்தாய்.


க‌ண் நான் கொடுத்தேன்
க‌ண்ணில்லை என்றாய்
க‌ரையா இத‌ய‌ம் கொண்டாய்
என்னையே க‌ருங்க‌ல் என்றாய்.

பித்தனே நீ எனக்கு
அத்தனையும் கொடுத்தாய் -என்
அமைதியையும் நீ கெடுத்தாய்
ப‌த்த‌ன் நானுன‌க்கு
எத்த‌னையோ ப‌டைத்தேன்
எதுவும் நீ ஏற்க‌வில்லை
சித்த‌த்தை நீ கெடுத்தாய் என்
சிந்த‌னையும் நீ கெடுத்தாய்
மொத்த‌த்தில் என்னை நீ
ப‌டைத்திருக்க‌த்தேவையில்லை.


உண்மை நீ பகர்தல்
இத்தனையும் உன் அறிவால்
நேரும் என்றறிந்திருந்தால்
இப்புவியில் உன்னைப்
படைத்திருக்க மாட்டேன் நான்.

சொந்தம் எனக்கில்லை
சுகமும் எனக்கில்லை
சந்தம் எனக்கில்லை
சரித்திரமும் எனக்கில்லை
கந்தல் உடைகூடக்
கணக்கில்லா எந்தனுக்கு
பந்தம் தர நினைக்கும் உன்
பேரறிவை என் சொல்வேன்?


சுழலுகின்ற இப்புவியில்
சுதந்திரமாய் உமைப்படைத்தேன்
உழலுகின்றீர் துன்பத்தில்
ஊனமுடை உள்ளத்தால்
நான் கொடுத்த சுதந்திரத்தை
அழித்ததுங்கள் தந்திரம்தான்.

சத்தியமாம் ஓர் சொல்லை
சாதகமாய் உனக்காக்கி
புத்தியில்லா மூடரையுன்
புலமையால் நீ வெல்லுகின்றாய்
எத்தனையோ வழிவகையால்
இவ்வுலகை நீ கெடுத்தாய்
முத்தியும் நீ கேட்பாய் முகமன் பலகூறி

இடுகாட்டில் இருப்பவன் நான்
என்று சொல்லியென்னை
எள்ளிநகையாடுகின்றீர்
உம் வயிறே இடுகாடு
பிணம் புதைக்கும் சுடுகாடு.


ஐயா அனைத்துமுண்மை
பொய்யாம் இவ்வுலகை
மெய்யென்று நம்பியதால்
உய்யாமல் நான் கெட்டேன்
மெய்யே நீ சொன்னாய்
செய்ய‌ வ‌ழிய‌றியேன்
செய‌லும் நான் ஒன்ற‌றியேன்
உன்னோடே நான் வாறேன்.


எதற்கும் இவ்விடத்தில்
நிற்பாய் நீ சற்றே
என் பெண்டாட்டி பிள்ளையுடன்
வந்திடுவேன் இப்போதே.


சொல்வதைக்கேள் என்மகனே
படியளக்க நான் போறேன்.
இப்போது முடியாது
பின்னொருக்கால் அழைத்திடுவேன்
அப்போது நீ வருவாய்.


ஆண்டவனே ஐயா
என்னை விட்டு ஏகாதே
தெண்டனிட்டேன் உன்னடியில்
தெருவில் விட்டுப்போகாதே
என்று சொல்லிச்
சாட்டாங்கமாய் விழுந்தேன்
சங்கரன் அவனடியில்.
கண் விழித்தேன்
கல்லொன்றின் மேற்கிடந்தேன்.
உற்று உற்று நான் பார்த்தேன்
கல்லன்றி வேறில்லை.


Free Signature Generator

Free Signature Generator

2 கருத்துகள்:

kuma36 சொன்னது…

///அறிவைக்கொண்டே
ஆயுதம் படைத்தாய்
அதனைக்கொண்டே
அனைத்தையும் அழித்தாய்.///

ஆமாங்க சரியா சொன்னிங்க!

அனுபவம் சொன்னது…

நன்றி தோழர் கலை அவர்களே!
நிறைகளையும் அதேவேளை குறைகளையும் சொல்லுங்கள்.
நிச்சயம் உங்கள் பக்கத்தையும் நான் பார்வையிடுகின்றேன்.
அன்புடன்
தணிகாஷ்