26 மார்ச் 2009

இதுதான் சகுனம்?


நடுச்சாமம் கடந்து
நாலுமணியடித்த பின்பு
கனவொன்று கண்டு
கண்விழித்த எந்தனுக்கு
பயத்தால் உடல் வியர்த்து
படபடென நடுங்கியது.

நடுக்கம் நீங்குமுன்பே
நானெழுந்து கனவதனை
ஒருக்கால் நினைத்துவிட்டு,
கண்ட கனவதனை
ஒருவருக்குச் சொன்னாக்கால்
அண்டாததன் பலனென்று
அன்றொரு நாள்
ஆச்சி சொன்ன
சூழ்ச்சி நினைவில் வர‌
பக்கத்திற் படுத்திருந்த‌
பங்கஜத்தைத் தட்டிவிட்டேன்
திடுக்கிட்டு அவளெழுந்து
திகிலோடு எனைப்பார்த்தாள்.
அப்போது
நடு மோட்டில் இருந்த பல்லி
நச்சென்று நாலு சத்தம் கத்தியதும்
உச்சத்துக்கேறியது எனது பயம்.

தொப்பென்று ஏதோவென்
தோழின்மேல் விழவே
பாம்பென்று பாய்ந்தாள்
பங்கஜம் அப்பால்
துள்ளி நான் எழுந்து நின்றேன்
பாம்பல்ல பல்லியது.

பல்லி விழுந்த பலனறிய‌
வல்லிபுரம் ஐயாவின்
வாசல் செல்ல மனம் நினைந்து
சொல்லிவிட்டென் மனைவியிடம்
சுறுக்காய் நான் வழி நடந்தேன்
கல்லொன்று தட்டியது‍‍ என்
கால் விரலில் நகமில்லை.

பயணத்திற் கால் தடக்க‌
வழி நடத்தல் கூடாதென்ற‌
அபசகுன விதியறிந்து
அத்தோடே வீடுவந்தேன்

மனைவந்து சேர்ந்த என்னை
மனைவியவள் விடவில்லை
மருத்துவமனை செல்லவென்றாள்
அவளோடு குழந்தையும் ஆர்ப்பரித்தான்.

மூவர் வழிசெல்லல்
முறையல்ல என்றவளும்
முத்துலிங்க அண்ணனையும்
முறைக்காய் அழைத்தெடுத்தாள்.
முச்சக்கர வண்டியதும்
முற்றத்தில் வந்ததுவே!

நெருக்கி நாங்கள் இருந்தாலும்,
முத்துலிங்க அண்ணனவர்
முதுகைத்திருப்பி என்பால்
முழ‌ங்காலை வெளியில் விட்டார்
முச்சக்கர வண்டியது
முச்சாண்தான் போயிருக்கும்
முடுக்கிற் திரும்புகையில்
முன்னே வந்தவண்டி -அவர்
முழங்காலில் மோதிடவே
குடைசாய்ந்த எங்கள் வண்டி
குட்டைக்குள் வீழ்ந்ததையோ!

ஓவென்று மனைவியழ‌
ஒருசத்தம் குழந்தைக்கில்லை
ஆ! என்றார் அண்ணனவர்
அவர் காலில் துண்டில்லை.
அதிவேகமாய் வந்த‌
ஆம்புலன்சு வண்டியிலே
அனைவரும் நாமேறி
ஆஸ்பத்திரி சென்றடைந்தோம்.

ஆளுக்கொரு விடுதியிலே
அனுமதிக்கப் பட்டோம் நாம்
கண்ட கனா பலித்ததென்று
கடவுளை நான் நொந்துகொண்டேன்.


Free Signature Generator

Free Signature Generator

கருத்துகள் இல்லை: