03 ஜூன் 2009

கெட்ட குடி!

இன்று காலையில் எழுந்ததிலிருந்து எத்தனை தடவைதான்
பாக்கியம் சாமியறைக்குட் சென்று தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வணங்கிவிட்டாள். இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்துபோன சம்பவங்கள் எல்லாம் அவள் மனதில் அலையலையாக வந்து திரும்பிக்கொனண்டிருந்தன.படலையருகில் நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்த பாக்கியம் சலித்துப் போனவளாய் மீண்டும் சாமியறைக்குட் செல்கின்றாள்.

"அப்பனே பிள்ளையாரே! இந்தத் தடவையெண்டாலும் எந்தத் தடங்கலுமில்லாமல் இந்த வரன் அமைஞ்சி என் மகள் கீதாவோட வாக்ழ்கைக்கு ஒரு வழி பிறக்க நீதானப்பா துணை செய்ய வேணும்" என்றிவ்வாறாக பிரார்த்தித்துக்கொண்டாள் பாக்கியம். மீண்டும் படலையண்டைச் செல்கின்றாள். வீதியில் சென்று தன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்வையைச்செலுத்துகின்றாள்.ஏமாற்றம்தான் அவளுக்கு மிஞ்சுகிறது.

பாக்கியத்தின் கணவன் கந்தசாமி படிக்காத ஒரு பாமரன்;குடிகாரன்; தோட்டச்செய்கையே அவனது தொழில். ஊருக்குள் அவனைப்பற்றி விசாரிப்பதென்றால் குடிகாரக்கந்தசாமி என்றே விசாரிக்க வேண்டும்.கந்தசாமி‍- பாக்கியம் தம்பதியினருக்கு மூன்று பெண்கள். மூத்தவள் கீதா, உயர்தரம்வரை படித்துவிட்டு வீட்டிலிருக்கின்றாள். மற்றவள் மாலா, சாதாரணதரம்வரைப் படித்துவிட்டுப் பரீட்சை எடுக்காமலே நின்றுவிட்டாள். இளையவள் லதா,ஒன்பதாம்தரம் படித்துக்கொண்டிருக்கின்றாள்.

கீதாவுக்கு இதற்குமுன் பல தடவைகள் கல்யாணம் கேட்டு வந்தபோதும் அவை அயலவர்களது தட்டுதல்கள் காரணமாக பேச்சளவிலேயே முடிந்து போயின.

"அவள் பிள்ளை கீதா ஏதோ பார்க்க அழகாக இருக்கிறாள் என்பது உண்மைதான்.ஆனால், அந்தக் குடிகாரக் கந்தசாமிர குடும்பத்துல‌ நீங்க பெண் எடுக்கிற எண்டுற விஷயம் எங்களுக்கு அவ்வளவு நல்லதாப் படல்ல.ஏதோ நாங்க சொல்லுறத சொல்லிட்டம். நீங்க உங்களுக்குப் பட்டமாதிரிச் செய்யுங்க" ஊரார் இப்படிச் சொல்லிச்சொல்லியே வந்த வரன்கள் எல்லாம் தட்டுப்பட்டுப்போக, கடைசியாக வந்ததுதான் இந்தச் சம்பந்தம். பக்கத்து ஊர் நடராசாவர்ர மகன் கீதன் கீதாவின் அழகிற்காகத்தான் அவள விரும்பி தம்பிராசாவர விட்டு விசாரிச்சவன். அவர்கள் நாளை பெண் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

பெண் பார்க்க வருபவர்களை உபசரிக்க வேண்டாமா? அதற்காகத்தான் பாக்கியம் கீதாவின் காப்பு ஒரு சோடியைக் கந்தசாமியிடம் கொடுத்து அடகு வைச்சுப்பொட்டு சாமான்சக்கட்டு வாங்கிவரும்படி பல கட்டுப்பாடுகள் வச்சி ரவுணுக்கு அனுப்பியிருக்கிறாள்.காலையில் சென்ற கந்தசாமி மாலையாகியும் வீடு திரும்பாதது அவளுக்கு ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. அதுதான் அவளது பதட்டத்துக்குக் காரணம். நேரமும் மாலை ஏழு மணியாகிவிட்டது. கந்தசாமி இன்னும் வீடு வந்து சேர்ந்த பாடில்லை.

பக்கத்து ஒழுங்கையில் நாய்கள் விடாமற் குரைத்துக்கொண்டிருக்கின்றன.
நேரமும் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. யாரோ ஒருவன் கோவணத்தோடு அங்கே தள்ளாடிக்கொண்டு செல்வது தெரிகிறது. ஆம்! அது வேறு யாருமல்ல நமது கந்தசாமிதான். " நான் உழைக்கிறன். நான் குடிக்கிறன்.ஆருடா என்னக் கேட்கிற ஆ...?" என்று இவ்வாறு வீரப்பிரதாபம் பேசிக்கொண்டு வந்த கந்தசாமியர் முத்துலிங்கத்தின் வளவுக்குள் நுளைகிறார்.
அங்கு முத்துலிங்கம் வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க அவனது மனைவி இளஞ்சூட்டு நீரைப் போத்தலில் எடுத்து அவனது வயிற்றில் உருட்டிக்கொண்டிருக்கிறாள். வெறியோடு வந்த கந்தசாமிக்கு தன் மனைவிதான் இன்னொருவனுடன் இருப்பதாகப்படுகிறது. " ஆருடா அவன் வெட்டிப்போட்டிடுவன்" என்று சத்தமிட்டுக்கொண்டே அவர்களை நெருங்குகிறான் கந்தசாமி. முத்துலிங்கத்துக்கு இந்நிலைமை "மரத்தால விழுந்தவன மாடேறி மிதித்தமாதிரி" திடீரென்று துள்ளி எழுந்த முத்துலிங்கம் கந்தசாமியை பிடித்து நையப்புடைக்கின்றான்.

"வெறிகாரன விட்டிடுங்கோ, வெறிகாரனவிட்டிடுங்கோ " என்று முத்துலிங்கத்தின் மனைவி கத்திய சத்தத்தில் அங்கே சிலர் கூடிவிடுகின்றனர். அவர்கள் கந்தசாமியை பிடித்துத் தள்ளிக்கொண்டு அவனது வீட்டை நோக்கி நடக்கின்றனர்.

" இவனெல்லாம் ஒரு மனிசன் நாளைக்குப் பெண் பார்க்க வறாங்களாம். இந்த நிலையில். இருக்கிற வடிவா இது?" இது கூட்டத்தில் வந்த ஒருவரின் குரல்.
" இவண்ட போக்கால இல்லயா இதற்கு முதல் நாலைந்து இடத்தால வந்த வரன்களெல்லாம் தட்டுப் பட்டுப்போன" இது மற்றொருவர். இவ்வாறு கதைத்துக்கொண்டே அவர்கள் கந்தசாமியின் வீட்டு முற்றத்தை அடைகின்றனர்.

முற்றத்தில் சத்தங்கேட்டு பாக்கியமும் மக்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகின்றனர்.பலபேர் மத்தியில் தங்கள் தந்தை நின்றிருக்கும் நிலையைக் கண்ட பெண்கள் மூவரும் வீட்டுக்குள் ஓடிவிடுகின்றனர். பாக்கியம் வீட்டுக்குட்சென்று ஒரு சாறனை எடுத்து வந்து கந்தசாமியின் முகத்தில் எறிந்துவிட்டு வீட்டுக்குட் செல்கின்றாள். ஊரார் சென்று விட்டனர்.

கீதா தனது படுக்கையறைக்குட் சென்று கதவைச் சாத்திக்கொண்டு தலையணையில் முகத்தைப்புதைத்தபடி விம்மும் சத்தங்கேட்கிறது.

கந்தசாமி முற்றத்தில் விழுந்து கிடக்கின்றான். ஒருவரும் இரவுச்சாப்பாடு சாப்பிடவில்லை. நேரமும் 10:00 மணியைக் கடந்துவிட்டது. கீதாவைத்தவிர எல்லோரும் கண்ணயர்ந்து விட்டனர். கீதா இப்படியொரு சந்தர்ப்பத்தைத்தான் எதிர்பாத்திருந்தவள் போலிருக்கிறது. சந்தடியெதுவுமில்லாமல் மெல்ல எழுந்து ஒரு தாளை எடுத்து அதில் என்னமோ எழுதுகிறாள். எழுதிய கடதாசியை மடித்துக்கொள்கிறாள்.

மெதுவாக நடந்து சென்ற கீதா தன் தாயின் பாதங்களை அவள் நித்திரை கலைந்துவிடாதபடி மெல்லத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறாள். பின் தங்கைமார் இருவருக்கும் அருகிற் சென்று, அவர்களைச் சிறிதுய் நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறாள். பின் சமையலறைப் பகுதியால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

முற்றம் பெருக்குவதற்காக காலையில் நேரத்தோடு எழும் வழக்கமுடையவள் பாக்கியம்.இன்று வழமையைவிட சற்று முன்னரே எழுந்துவிட்டாள். எழுந்து முற்றத்துக்குச் சென்ற பாக்கியம் தான் கண்ட காட்சியால் நிலை குலைந்து போனாள்.எறும்புக்கூட்டம் கந்தசாமியின் உடலை மூடியிருந்தது.

"ஐயோ கடவுளே! எங்களை விட்டுப்போயிட்டயாப்பா..." பாக்கியத்தின் ஒப்பாரி அந்தப் பிராந்தியத்தையே அதிர வைத்தது. வீட்டுக்குட்படுத்திருந்த மகள்மாரும் ஓடிவந்து தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர். கீதா மட்டும் அவ்விடத்துக்கு வரவில்லை. அவள் ரோசக்காரிதான். சற்று நேரத்தில் கந்தசாமியை சுற்றி ஊர் கூடிவிட்டது.

கந்தசாமியின் வீட்டிலிருந்து ஆறேழு வீடுகள் தாண்டித்தான் முருகுப்பிள்ளையின் வீடு. ஒப்பாரிச்சத்தங்கேட்டு ஓடிவந்து தோட்டத்து வேலியாற் பாய்ந்த முருகுப்பிள்ளை தோட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு " ஓடி வங்கோ! கீதா நஞ்சு குடித்துச் செத்துப்பொயிற்றாள். ஓடி வாங்கோ....."
என்று குடல் தெறிக்கக் கத்துகிறான்.

சற்று நேரத்தில் கந்தசாமியை அனாதையாக விட்டுவிட்டு எல்லோரும் தோட்டத்துக்குள் வந்துவிட்டனர்.

"என்ர மகளே கீதா நீ போயிட்டயாடி. உன்னை மணக்கோலத்தில காணமுதல் பிணக்கோலத்தில பாக்கிறேனேடி.." என்று பாக்கியமும், " அக்கா! எங்கள விட்டுப் போயிற்றயா அக்கா...." என்று இரு தங்கைமாரும் தலையிலடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க, கூட்டத்தில் நின்றவர்களில் ஒருவன் கீதாவுக்குப் பக்கத்திற் கிடந்த ஒரு கடதாசியை எடுத்து சத்தமாகப் படிக்கின்றான்.

அன்புடன் அம்மாவுக்கு,

மகள் கீதா எழுதிக்கொள்வது, அம்மா நான் இந்த முடிவுக்கு வந்ததற்கு என்னை மன்னிக்கவும். நான் இந்த முடிவுக்கு வரக்காரணம் ...இவ்வாறு ஒரு பாடம்புகட்டுவதன் மூலம் அப்பாவைத் திருத்தி எமது குடும்பமும் நல்லதொரு குடும்பமாக சகலரும் மதிக்கத்தக்கவகையில் மாற்றி தங்கைமார் இருவரதும் வாழ்க்கையைச் சிறப்பாக அமைக்கவே. எனவே எனது இந்த முடிவு நியாயமானது என்றே எண்ணுகிறேன்.வருத்தப்படவேண்டாம். என் தங்கைமார் இருவருக்கும் எனது இறுதி வணக்கத்தைத் தெரிவிப்பதோடு நல்லதோர் வாழ்க்கைக்கு நிச்சயம் திரும்பப்போகும் அப்பாவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா என்னால் அதிகம் எழுத முடியவில்லை. இத்துடன் முடிக்கிறேன்.

இப்படிக்கு
அன்பு மகள்
கீதா.

கடிதத்தைப் படித்து முடித்தவுடனே சொந்தக்காரர்கள் என்றில்லாமல் அவ்விடத்தில் நின்ற எல்லோரது கண்களிலிருந்தும் கண்ணீர்த்திவலைகள் சொட்டுகின்றன.

சற்று நேரத்தில் கீதாவின் உடலும் முற்றத்துக்கே கொண்டுசெல்லப்பட்டது. ஆண்கள் பந்தல் போடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். பெண்கள் கூடியிருந்து தங்களுக்குட் பலவாறு பேசிக்கொள்கின்றனர்.பாக்கியம் மூர்ச்சித்துப்போனாள். இரு பெண்களும் பிரமை பிடித்தவர்களாய் இரு சடலங்களையும் மூர்ச்சித்துப்போன தாயையும் வெறித்துப்பார்த்தபடி இருக்கின்றனர்.

பெண் பார்க்க வருபவர்களை கோள்சொல்லித் திருப்பிவிட இன்று ஊருக்குள் ஆட்கள் இல்லாத‌தால் மாப்பிள்ளை வீட்டாரின் கார் வந்து கேற்றடியில் நிற்கிறது.

2 கருத்துகள்:

எஸ்.ஏ.சரவணக்குமார் சொன்னது…

நல்லா இருக்கு ...நிறைய எழுதுங்கள் ... வாழ்த்துக்கள் ...

அனுபவம் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி நெல்லைக்கவி எஸ்.ஏ.சரவணக்குமார் அவர்களே! உங்களைப் போன்ற பெரிய மனதுடையவர்களின் உந்துதல்களாலே எம் போன்ற சிறிசுகள் முன்னுக்குவர முடியும்.
அன்புடன் -thanikash