24 ஆகஸ்ட் 2009
என் கனவு கற்பனை காதல்!
ஏனோ என் கனவுகள் கற்பனைகளுக்குக்கூட
என்னோடு வாழப்பிடிக்கவில்லை.
அவை என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே
என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டன
நானே இராஜாவும் மந்திரியுமாய்
இராஜாங்கம் செய்த
எனது கனவு சாம்ராஜ்ஜியத்தில்
நான் கட்டிய
கோட்டைகள் கொத்தளங்களெல்லாம்
எனக்கே காட்சிதர மறுக்கின்றன
மூடமறுக்கும் எனது விழிகளில்
கனவுகளெல்லாம்
அஸ்தமனமாகிப்போனதுதான் காரணமாம்
பைத்தியகார வைத்தியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்
நான் மறந்துபோன எனது இறந்தகாலத்தில்
அதிககாலம் படுக்கையில் கிடந்ததால்தான்
நித்திரைகூட காய்ந்து சருகாகிப்போனதாம்.
நான் படுக்கையில கிடந்ததெல்லாம்
நித்திரைக்காக அல்ல
நிஜமாகத்தெரிந்த சொப்பனங்களின் சுகத்தை
சுவாசிப்பதற்காகத்தான்
இதை
நான் திரும்பத் திரும்பச் சொன்னாலும்
நம்புவதற்கு யாரும் தயாரில்லை
காரணம்
எல்லோரும் நம்பிக்கையைத் தொலைத்துவிட்டதுதான்
கனவுகளில் வாழ்ந்திருந்த
என் கடந்த காலத்தில்
கற்பனைகளைக்கூட
சேமித்து வைக்க
கொள்கலங்களுக்கே பஞ்சமாய்ப்போனதால்
அவை குப்பைத்தொட்டிகளிலேனும்
ஒதுங்கியிருக்குமோ என்ற
நப்பாசையுடன்
கைகளை விட்டுத் துளாவுகையில்
எனது கைகளில்
அகப்படுபவையெல்லாம்
மரணித்துப்போன எனது காதலின்
உதிர்ந்து விழுந்த இறகுகளைத் தவிர
வேறொன்றுமில்லை
குப்பைகளெல்லாம் உலகை ஆழப்போனதால்
குப்பைத்தொட்டிகளாவது
ஒதுங்கிக்கொள்ளக் கிடைத்ததே என்று
நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டன
எனது காதலின் சுவடுகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
//மூடமறுக்கும் எனது விழிகளில்
கனவுகளெல்லாம்
அஸ்தமனமாகிப்போனதுதான் காரணமாம்
பைத்தியகார வைத்தியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்
நான் மறந்துபோன எனது இறந்தகாலத்தில்
அதிககாலம் படுக்கையில் கிடந்ததால்தான்
நித்திரைகூட காய்ந்து சருகாகிப்போனதாம்.//
நன்றாக இருக்கிறது அன்பரே உங்களின் அனுபவக் கவிதை... மேலுள்ள வரிகள் அருமை...மிகவும் ரசித்தேன்..
வாழ்த்துக்கள்...
காதலை உணர்ந்தால் உணரும் உண்மைள் கவிதைகளாய் இங்கே உருவெடுத்துள்ளது...இப்படி எழுத எனக்கும் சொல்லி தரலாமே தணிகாஷ்...
மிக்க நன்றி நண்பர் பாலாஜி அவர்களே!
என்னம்மா தமிழ் கவிதை உலகை ஆழும் நீங்களே இப்படிச் சொல்லலாமா? நன்றிடா!
கருத்துரையிடுக