28 ஜூலை 2011
ஆயுட் கைதி
இதயம் திருடிச் சென்றவள்
கனவில் வந்து செல்கிறாள்
திருடி அவளைப் பிடிக்க - நான்
தினமும் முயற்சி செய்கிறேன்
கையைப்பிடித்து இழுக்கிறாள்
கைது செய்து செல்கிறாள்!
கனவைக்கூடக் கலைத்தவள்
கவலை கொள்ளச்செய்கிறாள்
அவளின் சிறையில் கைதி-நான்
ஒருவன் மட்டும் இருப்பதால்
ஆயுட்கைதியாக-நான்
அவளின் சிறையில் வாழுவேன்!
19 மார்ச் 2011
கற்றிட எனக்கும் உதவுங்கள்!
காதல் ஊருக்கு வழி எதுவோ?- என்
கண்மணி பேசும் மொழி எதுவோ?
முகவரியில்லா ஊர் தேடி -நான்
முழுமதி தொலைத்த ஒரு பேடி!
காதலி அவள் ஒரு புத்தகமாய்- ஒரு
கவிஞன் சொன்னது ஞாபகமே!
வழியில் ஒரு நாள் கண்டெடுத்தால் -அந்த
மொழிதான் வேண்டும் படிப்பதற்கு!
வெகுமதி தருவேன் தோழர்களே அந்தக்
காதலின் காதலின் மொழியைக் கூறுங்கள்!
காதலை வென்ற கலைஞர்களே! -அந்தக்
காதல் வலித்தால் மருந்தென்ன?
ஒருதரம் முயன்றாற் கிடைத்திடுமா? -இல்லை
பலமுறை முயன்றால் வெற்றியுண்டோ?
புத்தகம் படித்திட ஆசை கொண்டேன் -அந்தப்
புதுமொழி கற்றிட உதவுங்கள்!
17 மார்ச் 2011
ஒரு பூவின் ரகசியம்!
பூக்கள் காண்கையில் -உள்ளம்
பூரிப்பாகுதே!
பூவின் ரகசியம் -எந்தன்
பூவை ரகசியம்!
அழகு ரோஜாவே -எந்தன்
காதல் தேவதை!
செவ்வரத்தைதான் -அவள்
செவ்விதழ்களாம்!
பல்வரிசைகள் பால்
வெள்ளலரியாம்!
காந்தள்மலர்களே அவளது
கைகளானதே!
ஊசிமல்லியே- கொடி அவள்
இடையுமானதே!
குண்டுமல்லியை- நானும்
சொன்னாற் தொல்லையே!
வாசமல்லியே -எந்தன்
நினைவில் நீயடி!
சூரியகாந்தியாய் -என்னைச்
சுற்றும் பார்வையாம்!
என்னைக் காண்கையில்
செந்தாமரை முகம்!
எந்தன் தோட்டத்து
அழகு மலர்களை
யாரும் ரசித்திடில் -அவர்கள்
ஆயுள் குறைந்திடும்!
26 பிப்ரவரி 2011
கொள்ளையாய்ப் பேசலாம்..............!
கொள்ளைக்காரர்கள் கொள்கைக்காரர்களாகி
தமது பைகளை நிரப்பிக்கொண்டிருக்க ............
கொள்கைக்காரர்கள் கொள்ளைகளைக்கண்டு
கொள்ளை கொள்ளை என்று
கொள்ளையாய் கத்திக்கொண்ட
கொள்ளை மயக்கத்தில்
தமது கொள்கை மறந்து
கொள்ளை கொள்ளை என்று
வாய் பிதற்றிக்கொண்டிருக்க......................
கோழி கூவியதனால் பொழுது விடிந்தது
வெளிச்சத்தில் நடைபெற்ற
அறிஞர்களின்
ஆராய்ச்சி முடிவுகள்
ஊக்க மருந்துப்பாவனை பற்றி
உரக்கப்பேசின
முட்டாள்கள்
மூக்கில் விரல் வைத்துக்கொண்டார்கள்!
05 டிசம்பர் 2010
பேய் மகன் நீயல்ல பேயும் அவளல்ல...
பத்தினிப்பெண்ணவள் பார்வை பட்டால் -அந்த
அக்கினித்தீயும் அணையுமடா!
உத்தமி தந்த புத்திரனே -அதை
உருக்கமாய் நான் சொல்லக் கேளுமடா!
பெண்ணவள் உயிருள்ள பதுமையடா -அதில்
உணர்வுகள்கூட உள்ளதடா! -அப்
பதுமை தந்த புதுமகனே -அந்த
உணர்வுகள் உன்னிலும் உள்ளதன்றோ?
அன்புக்கு ஏங்கிடும் பெண்மனமே- அது
துன்பம் கண்டால் துவண்டிடுமே!
வெண்பட்டுப்போலும் அவள் மனமாம் -அதில்
கரும் புள்ளி எதனால் உருவாகும்?
பெண்ணவள் கொண்டாள் பலவடிவம்- நீ
கண்டது ஒன்றே பேய்வடிவம்!
பேய்தான் உனக்குத் தாய் என்றால் -அந்தப்
பெருமை உனக்கே கேள் மகனே!
பெண்ணவள் ஏனோ வெறுக்கின்றாள்? -இந்த
ஆணின் நடையால் ஒதுக்கின்றாள்.
"அவல்" என்று நீயும் இடிக்கின்றாய்
அதுகண்டு"அவளு"ம் துடிக்கின்றாள்!
ஆண்மகன் என்று சொல்கின்றாய் -உன்
மனைமகள் அவளை வெல்லாமல்
இன்னொரு பெண்ணைக் கொள்கின்றாய்
அதனால் அவளைக் கொல்கின்றாய்!
அன்னை அக்கா அண்ணியென்று
அனைவரும் பெண்கள் அறியாயோ
கண்ணைக் குத்திக் கெடுக்கின்ற
கயமை ஒழித்து வாழ் மகனே!
இன்னும் சொல்ல வார்த்தை உண்டு
இன்னொருக்கால் நான் வருகின்றேன்!
10 மார்ச் 2010
நீ அல்லது தீ
கட்டியே தழுவியுன்னை
சாதலை அணைத்துக்கொள்ளும்
விட்டிலுங்கூட வீழ்ந்துயிர் மாய்தல்
கட்டிலில் தழுவும் ஆசையில்தானே?-உன்னைத்
தொட்டிடத் தாவும் குழந்தையுங்கூட
பட்டபின் நெருப்பைக் கண்டதும் ஓடும்
வெட்டெனப் பாயும் உன் சீற்றமென்ன?
நல்லவர் ’தீ’யர் யாவர்க்குமிங்கே
நீ”தீ”யின் தீர்ப்பு ஒன்றெனச் சொல்லி
வெல்பவர் மனதை வெல்லலாம் எனினும்
ஏற்பில்லை எனக்குத் தீயாரின் தீர்ப்பு!
தீய்க்கென்ன தெரியும் தீய்க்கத்தான் தெரியும்
தீய்ந்தவர் நெஞ்சத்தின் வேதனை புரியுமா?-இல்லை
தன்மேல் சாய்ந்தவர் உள்ளத்தின்
காதல்தான் தெரியுமா?
28 பிப்ரவரி 2010
சாத்திரம்????????
பாத்திரத்தை உடைத்துவிட்டு
சாத்திரம் பார்க்க வரும் முட்டாளே!
சாத்திரம் உனக்கு வந்து
மூத்திரம் பருக்குவதை
மாத்திரம் நீ கண்திறந்து பாராயோ?
07 ஜனவரி 2010
கடவுள் படைத்த மனிதன்!
அகிலத்தை நடுங்க வைத்து
அண்டங்களெல்லாம்
ஆர்ப்பரித்து அமைதிகொள்ள
கண்டெங்கள் இறைவன்
கடல் நடுவே அமைதி கண்டான்
ஊழி அடங்கியதும்
உறங்கியவன் கண்விழித்து
ஆழி நடுவே- தன்
அநாதை நிலை உணர்ந்து கொண்டான்
"காளி கூளி என்ற
பேய்ப்படைகள் தூண்டியல்லோ
ஊழியை நான் நடத்திவிட்டேன்
உலகனைத்தும் அழித்துவிட்டேன்
உலகோடு உயிர் அழித்து -என்
உடைமையெல்லாம் தொலைத்துவிட்டேன்"
என்று பல நினைந்து
நொந்து பின்னர்தெளிந்து கொண்டான்
உலகோடு
உயிர்களெல்லாம் இல்லையென்றால்...
எனக்கேது வேலையென்று?
மீண்டும் தன் தொழில் தொடங்க
மனிதனென்றோர் விலங்கு செய்தான்
ஒன்றே பலவாகி பலவாயிரமாகி
கண்டங்களெங்கும்
கனகோடி மனிதர் வந்தார்
விலங்காகப் பிறந்தவனே
விலங்கினின்றும் பிரிந்து சென்றான்
கல்லாயுதங்கொண்டு
காட்டினிலே வேட்டை செய்தான்
காலங்கள் கடந்து சென்று
வில்லாயுதம் படைத்தான்
வில்லாயுதம் கொண்டு
வில்லங்கமாய்ப் போர்தொடுத்தான்
பலகாலம் கடந்து வந்து
பல்குழலாயுதம் படைத்தான்
பார் முழுதும் தனதாக்கப்
போர் தொடுத்து உயிரழித்தான்
உயிரழித்த அவனறிவால்
உயிர் படைக்க வழி சமைத்தான்
தன்திறனை விருத்தி செய்து
சந்திரனில் கால் பதித்தான்
இயற்கைக்கும் தொல்லை செய்தான் -உலகையவன்
எல்லை செய்தான்
ஓராயிரமாண்டு
ஒப்பற்ற விந்தை செய்தான்
ஈராயிரமாண்டில்
இல்லை உலகென்றான்
இயற்கைக்குப் பயந்த அவன்
இயற்கையையே வணங்கி நின்றான்
செயற்கையிலே கடவுள் செய்து -தன்
எண்ணம் போல் உருக்கொடுத்தான்
அணுவுக்கு அணுவாய்
அப்பாலாய் நின்ற தெய்வம்
அணுவைப் பிளந்தவனின்
அறிவுக்கும் எட்டுதில்லை
காபனை உயரவைத்தான்
காலநிலை மாறவைத்தான்
ஒசோனில் ஓட்டை என்றான
"ஓபன் ஹெகன்" என்றான்
எல்லாம் அவன் படைப்பான்
கடவுளுக்கு வேலையில்லை
கடவுள் படைத்ததெல்லாம் -அவன்
கால் தூசும் பத்தாது!
28 டிசம்பர் 2009
கவிதை பிறந்த வரலாறு!
கவிதை பிறந்த வரலாறு என்றதும் நீங்கள் ஏதேதோ யோசிப்பது எனக்கு விளங்குகிறது.இங்கு நான் சொல்வது என்னிடம் கவிதை பற்றிய எண்ணம் பிறந்த வரலாறு பற்றித்தான்.நான் தரம் ஏழில் பயின்று கொண்டிருந்தகாலம். காலைக்காட்சிபற்றிய ஒரு வர்ணனை எழுதிக்கொண்டு வரும்படி எங்கள் ஆசிரியை சொல்லியிருந்தார். நான் வழமைபோல எனது தந்தையாரிடம் "ஐடியா" கேட்டுக்கொண்டிருந்தேன்.அவர் தனது வழிகாட்டலுடன் சூரிய உதயம் பற்றிய வர்ணனையை பின்வருமாறு எழுத உதவினார்.
"செண்பகம் மேளம் கொட்ட
குயில்கள் பாட்டிசைக்க
சேவல்கள் வாழ்த்துக்கூற
காகங்கள் வருக வருக என்றழைக்க
குருவிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய
தாமரைகள் தமது நண்பன் வருகையைக் கண்டு முகமலர
ஏழு வர்ணப்புரவிகள் பூட்டிய
தேரில்செங்கதிரோன் உதயமானான்
இந்த வரிகளுடனான அந்தக்கட்டுரை ஆசிரியையின் பாராட்டைப் பெற்றது.அதன் பின்னர் எழுதப்போகும் கட்டுரைகளில் கவிவரிகளைச்சேர்ப்பது என்று உத்தேசித்துக்கொண்டேன்.
அடுத்து எங்களுக்கு ஆசிரியை எழுதச்சொன்ன கட்டுரை "மழையற்று வரண்டுபோன ஒரு பிரதேசம்" பற்றிய வர்ணனைக்கட்டுரை. அதில் நான் சுயமாக எழுதிய கவிவரிகள்( அப்போதைக்கு என்மட்டில் கவிவரிகள்) கீழேயுள்ள வரிகள். அவை எனது தந்தையார் மற்றும் ஆசிரியை ஆகியோரது பாராட்டுக்களைப் பெற்றவை.
"கையில் குடம்
கக்கத்திற் பிள்ளை
பையில் ஒருபிடி அன்னம்
பக்கத்தில் நீரல்ல
கைலைக்குப் போவதுபோல்
கக்கிசங்கள் பலபட்டு
ஐயையோ என்று
நீர் தேடும் அலைச்சல் தொடர்கிறது"
இந்த வரிகளுக்கான ஆதரவுதான் கவிதை என்று எண்ணிக்கொண்டு நான் ஏதேதோவெல்லாம் எழுதக்காரணமாயிற்று. இதுதான் உண்மை! என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்!
10 நவம்பர் 2009
உண்மைக்காதல்!
மாடி வீட்டு முற்றத்துல
கூடிருந்து ஆடயில சின்னத்தான்- நீ
முத்தமிட்டுச் சொன்ன கத என்னத்தான் -எனை
முத்தமிட்டுச் சொன்ன கத என்னத்தான்?
போடி போடி புள்ள நீ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ? -எப்போ
போன கத சொல்வதிங்கு ஏனிப்போ?
கோடி கோடியாய் உழைத்து
கோடீஷ்வரன் ஆனபின்பு
தேடி என்னை மணம் புரிவேன்
என்று சொன்னியே -இப்போ
போடி போடி என்று நீ விரட்டுறியே?
சின்ன வயசில நான்
சிந்திக்காம சொன்னதெல்லாம்
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா -புள்ள
உண்மையாக உன்மனதில் வச்சிருக்கியா?
எதற்காக என்னக் கட்டத் தயங்குறீங்க?
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?- எனக்கு
என்ன குறைச்சலென்று சொல்லுவீங்களா?
கறையொன்றும் இல்ல கண்ணே உன்னிடத்திலே
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே-பெரிய
குறையெல்லாம் இருக்கிறது என்னிடத்திலே
குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே- பெரிய
குறையொன்றும் இல்லை அத்தான் உன்னிடத்திலே
பணக்கார பெண்ணென்று விலக்குறீங்க- உங்க
குணம் மட்டும் எனக்கென்றும் போதுமையா
உன்னவிட்டு நான் என்றும் பிரியேனடி -உங்க
அப்பனுக்கும் சதி செய்ய நினையேனடி
வாடி கண்ணே ஆசீர்வாதம் பெற்றுக்குவோம்
வாழ்த்தி அத்தை வரம் கொடுத்தா வாழ்ந்துக்குவோம்!
08 நவம்பர் 2009
என் காதல் தேவதை
கனவுக்கு அர்த்தம் சொல்லக்
காதலி வந்தாளாம் -என்
காதலுக்கு உயிர் கொடுக்க
கண்ணகி வந்தாளாம்
வாழ்க்கைக்கு ஒரு ஒளிகொடுக்க
வான்மதி வந்தாளாம்
வாசமலர் தேன் கொடுக்கத்
தேடி வந்தாளாம்
ராமன் கண்ட சீதை அல்லோ
எந்தன் சிறிதேவி
வாழ்க்கைக்கு நற்பயன் கொடுக்க
அவளே என் ராசி
வாழ்க்கை எனும் போராட்டத்தில்
வெற்றித்தேவதையாம்
ஆயுள்பலம் வாங்கிவந்த
அழகு ரோஜாவாம்
பெண்களுக்கு விதிவிலக்காய்
திருமகள் இவள்தானே
திருஷ்டி சுற்றிப்போடுங்கடி
தெய்வ மகளுக்கு
21 அக்டோபர் 2009
திரு(மதி)புகழ்
அத்தைக்கொருமகள் முத்தை நிகர் கிளி
தத்தத் தனவென நர்த்தனமிடுமயில்
எட்டாதொருமொழி கற்றுப் பயின்றவள் எழிலோத
மெட்டி யணிந்தவர் கடுக்கனணிந்தவர்
கட்டிக்கொளவென காதல் செயவென
சுற்றித்திரிந்தவர் பலபேர்கள்
வெட்டிப்பயலவன் கட்டிக்கொடுத்திடில்
குட்டிப்பெண் மகள் குறைகள் வருமடி
வேண்டாமவனெனச் சொன்னா ரென்மாமன்
அவழுக்கிணையிலை அழகிற் கலைமகள்
மெத்தப்பெருந்தொகை அழகுப்பொருள்கொள
கட்டாதென் தொழில் வருமானம்
பணத்திற் பிறந்தவள் குணத்திற் சிறந்தவள்
பத்துப்பவுணுடன் வேண்டும் ஒருகொடி
கட்டிக்கொள அவள் கழுத்திற்கொரு தாலி
அத்தைக் கென்றும் நானோ பெருமகன்
மகளுக்கென்றும் நானே மருமகன்
மட்டிப் பயலவன் தட்டிச் சென்றிட விடுவேனோ
17 அக்டோபர் 2009
மாலையிட வாராயோ?
சோகமே முகவரியாய்-எந்தன்
வாழ்க்கையின் தலைவிதியோ?
மேகமே கலையாதோ -அந்த
வெண்ணிலவின் ஒளிபடவே
தேவி நீ இல்லாமல்-இந்தப்
பாவி நான் வாடுகிறேன்
தேன்துளி கசக்குதடி-எந்தன்
தேவி நீ இல்லாமல்
பூ மலர்ந்து மணம் தருமே-எந்தன்
பூமகள் கூந்தலெங்கே?
காதலுக்கு வேலியிட்டு
காவல் செய்யும் கொடுமையென்ன?
மான்விழி மலர்விழியாய்
நான்புகழ்ந்த விழிகளெங்கே?
உன்னைத்தினம் காணாமல்
தூங்குதில்லை என்விழிகள்
கன்னி உந்தன் நினைவுகளால்
கண்ணில் இந்த நீர்துளிகள்
மண்ணைவிட்டுப் பிரிந்தாலும்
உந்தன் நினைவுகள் மாறாது
கங்கையில் விழுந்திடவோ-எந்தன்
கண்மணியைத் தேடிடவோ
என்கையில் இருந்தகிளி
எங்கே போய் ஒழிந்ததடா?
மங்கை எந்தன் மலர்க்கொடியே
மாலையிட வாராயோ?
13 அக்டோபர் 2009
விழி நீர் செலுத்த வந்து விடு!
கனவில் வந்த காதலியே!
காதலை என்னுள் வளர்த்தவளே!
மனதில் நின்ற தேவதையே - என்
மனதை நிறைத்துக் கொண்டவளே
கவிதை பாடப் பொருள் கொடுத்தாய் -என்
கற்பனையெல்லாம் பறித்தெடுத்தாய்
வாழ்க்கை உனக்கு விளையாட்டா -என்
உயிரை அதில் நீ பணயம் வைக்க
எட்டிக்காயாய் ஆனேனோ -நீ
எட்ட நின்று பார்க்கின்றாய் -உன்
பார்வையில் ஏனடி பனிமூட்டம் -நான்
பார்வையிலிருந்து மறைகின்றேன்
மட்டி மடையன் நானல்லோ?-உன்
மனதைக்கூடப் புரியாமல்
கட்டிக்கொள்ள நினைத்தேனே -என்
கற்பனையை நான் என் சொல்ல?-உன்னை
அணைக்க முடியாமல்
சாவை அணைத்துக் கொண்டேனால் -என்
கனவுகள் உன்னைத்துரத்துமடி
நினைவுகள் உன்னை வருத்துமடி
கல்லறையில் பூ மலர்வதனால் -என்
கனவுகள் என்ன உயிர் பெறுமா?
மணவறையில் என் கரம் பிடியா நீ -என்
பிணவறையில் ஏன் மரம் நடுவாய்?
உன்னை ஒருவன் அணைக்க முதல் -நான்
சாவை அணைத்துக் கொள்கின்றேன்
விழிகள் உனக்கு இருக்குமெனில் -நீ
விழி நீர் செலுத்த வந்து விடு! -என்
நினைவுகள் உன்னுள் இருக்குமெனில்
நினைவஞ்சலியும் செலுத்திவிடு!
நிலாச்சோறு!
முழு நிலவில் பால் கறந்து
நிறைபானை பொங்கல் வைத்தோம்
இரவென்றும் பாராமல்
ஊரெல்லாம் பகிர்ந்திட்டோம்
சுற்றமெல்லாம் சேர்ந்திருந்து
முற்றத்திற் கதைபேசி
முழுவதையும் உண்டார்கள்!
காலை விடிகையிலே
பானையதும் காலியாச்சு
மறு இரவும் பொங்கலிட்டோம்
பி(ப)டியரிசி குறையாக....
எனினும்
முன்னிரவுபோலே
முறையாகப் பங்கிட்டோம்
தொடர்ந்து வந்த இரவுகளில்
ஒவ்வோர் பி(ப)டியரிசாய்க் குறைத்திட்டோம்
பானையதும் குறையாக
ஊர்வயிறும் அரைவயிறாய்....
ஒரு நாள் மட்டுமிங்கே
பானையிட அரிசில்லை
மாதமொரு நாள்
மக்களெல்லாம் பட்டினியாய்...
05 அக்டோபர் 2009
இதயமல்ல கருங்கல்!
தொடராய் ஓடும் நதியின் நீரால்
கல்லுங்கூடக் கரைந்திடுமாம்
கண்கள் சிந்தும் உவர் நீர்க்கடலில் -உன்
இதயம் ஏனடி கரையவில்லை?
காதல் என்னும் சுழல் நீர் உள்ளே
என்னைப் பிடித்துத் தள்ளி விட்டாய்
மீழத்துடிக்கும் எந்தன் தலையில்
நினைவுகள் கொண்டு தாக்குகின்றாய்
மழை மேகம் அழிந்தாற்கூட
வானவில் வர்ணம் மாறுவதில்லை
சிலையாய் எந்தன் நெஞ்சில் நிற்கும்
வஞ்சியுன் எண்ணம் மாறியதேனோ?
உனக்கும் இதயம் உண்டென்று
உண்மையில் நானும் நினைத்திருந்தேன்
கனக்குமென் மனச்சுமை அறியாத-கருங்
கல்தான் உனக்குள் இருக்கிறது
உன் இதயம் என்னும் கருங்கல்லை -என்
மனதில் சுமந்து வலி கொண்டேன்
எவரெஸ்ட் சிகரமென் றறிந்திருந்தால்
அதன்மேல் ஏறி அமர்ந்திருப்பேன்!
02 அக்டோபர் 2009
உழவன்!
மறைந்திடும் மனிதன்
யாரவனென்று பாருங்கள்!
பலர் வாழ்ந்திட உடல் நீர்
உரமாய்ச் சிந்தும்
உழவன் அவனே கடவுளடா!
அவன் உடம்பினில் தெரியும்
நாளங்களெல்லாம்
உலகுக்கு உயிர்தரும் ரத்த அருவி
அரை வயிற்றுக்கு உணவு
அரையினில் துண்டு
ஆண்டவன் எளியவன் பாருங்கள்!
வரம்பினில் உண்டு
வயல்தனில் தூங்கும்
அவனே உலகின் அச்சாணி
அவன் நரம்புகள் சொல்லும்
வழ்க்கையின்கீதம் வாசித்துப் பாருங்கள்!
காற்றினில் மழையினில்
கடும் வெயில் பனியினில்
வீட்டையும் மறந்து அவனுழைப்பான்
தூற்றிய பதருடன்
கனவுகள் கலையும்
துயரம் நீங்கள் அறிவீரோ?
மண்ணைப் பொன்னாய்
மாற்றிடும் மாற்றிடும் உளைப்பு
மந்திர வித்தை ஜாலமல்ல
பயிர்களினுள்ளே களையெடுக்க
அவன் உடற்களைகூட ஓடிவிடும்
ஏர் தொழும் அவனும் வாழ்வதற்கு
ஏது நீசெய்வாய் வழியதற்கு?
சுரண்டாதே நீ அவனுழைப்பை
சுகமாய் வாழ அவனை விடு!
அவனது கனவு குழந்தையின் வாழ்க்கை
அதற்கொரு வழியை நீ காட்டு!
27 செப்டம்பர் 2009
வாழ வழி விடுங்கள்!
அரும்புகள் சருகாவதோ-இவர்
இரும்பாக உருவாவரோ-இல்லை
கரும்பாக உயிர் மாழ்வரோ?
வாழ்நாளே இருளாவதோ-இல்லை
வருங்காலம் ஒளியாகுமோ-இவர்
வருங்காலம் ஒளியாகுமுா?
நிகழ்காலம் வாழ்ந்தாக
எதிர்காலம் இரையாவதோ-இவர்
எதிர்காலம் இரையாவதோ?
துன்பக்கடலோடு விளையாடி
கரைமீது இவர் சேர்வரோ-இன்பக்
கரைமீது இவர் சேர்வரோ?
உலைமீது கரியாக
இவர் செய்த வினையேதம்மா?-இந்த
விதியென்னும் சதியேதம்மா?
உலகத்தின் புதுவேர்கள்
உலைமீது கரியானால்
நிலையாகப் புவி நிற்குமோ?-இங்கு
நிலையாகப் புவிநிற்குமோ?
விலைபேசி இவர் வாழ்வை
வீணாக்கும் கொடியோரே-உங்கள்
பிணங்கூடப் பணந்தின்னுமோ?-இல்லை
பணங்கூடப் பிணந்தாங்குமோ?
வாழப் பிறந்தோரே வழி விடுங்கள்-இவர்கூட
வாழ வழி விடுங்கள்-வலிக்கும்
இவர் பாதம் தடவிடுங்கள்!
09 செப்டம்பர் 2009
உனது மொழி!
ஓ..! எந்தன் கனிமொழி!
உன் விழி கற்றதெங்கோ!
நீ மொழி கற்றதெங்கோ!
நீ பேசுவது மொழியா?
இல்லை
உன் மொழி பேசுவது விழியா?
ஏனோ உன் செவ்விதழ்கள்
மொழி பேச மறு(ற)க்க
தீட்டிய மைவிழிகள்
கவிதை சொல்ல வாய் திறக்கும்!
சில மொழிகளுக்கு ஒலி மட்டும் உண்டு
சில மொழிகளுக்கு ஒலி வரி இரண்டுமுண்டு!
ஆனால் இரண்டுமில்லா மொழியுமுண்டு
அதுதான் நீ பேசும் மௌனமொழி!
03 செப்டம்பர் 2009
மெல்லச் சுவைக்கும் கல்லவள் இதழ்கள்
மெல்லிடை மெல்லெனக்
காற்றினில் ஆடுது
மெல்ல மெல்லச் சுவைக்கும்
கல்லென உன் இதழ்கள் இனிக்கும்
பூங்கொடி மேனியில்
பூத்த வெண் பூவெனப்
பல்வரிசை சிரிக்கும்
பொன் நகைகள் உதிர்க்கும்
உன் கண்களில் பிறந்திடும்
மொழியதன் அழகினில்
கவி வரிகள் பிறக்கும்
மனம் சுமைகள் மறக்கும்
பொன்மகள் கன்னத்தில்
சுருண்டிடும் கேசங்கள்
சிறு தூண்டில் வளைக்கும்
கயல் மீன்கள் பிடிக்கும்
சிற்றிடை தாங்கிய பட்டணி
உன் எழில் ஒளியினில் ஜொலிக்கும்
எனைக் கட்டிட வாவென
முட்டிய உன்னழகழைக்கும்